நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
400 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிப்போம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பா.ஜ.க சொல்லி வந்த நிலையில், 240 இடங்களைக் கைப்பற்றியதால் எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் கூட காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பா.ஜ.க வெறும் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டப்படும் என்று பா.ஜ.கவினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு அங்கு அதிகப்படியான இடங்களைப் பெற்றனர். இதனையடுத்து, அங்கு ராமர் கோவில் கட்டுவதற்காகப் பூமி பூஜை செய்யப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி பிரமாண்டமாகக் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராமர் கோவில் விவகாரம், அங்குக் கோவில் கட்டப்பட்டதிலிருந்து அந்த விவகாரம் எடுபடவில்லை என்றே கூறப்படுகிறது. அதில் ராமர் கோவில் கட்டப்பட்ட இடமான அயோத்தியை ஃபைசாபாத் தொகுதியில் கூட பா.ஜ.க படுதோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் இன்று (06-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பற்றியும், பா.ஜ.கவின் தோல்வி பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க இன்னும் அதிக இடங்களை இழந்திருக்கும் என்பதே உண்மை. அயோத்தி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அயோத்தியின் வலியை அவ்வப்போது பார்த்திருப்பீர்கள். அவர்களின் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை, அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது, சந்தை விலைக்கு நிலம் கையகப்படுத்தப்படவில்லை, அவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு வலுக்கட்டாயமாக நிலத்தை பறித்தார்கள் புனிதமான காரியத்திற்காக ஏழைகளை அழித்தார்கள் அதனால்தான், அயோத்தி மற்றும் அண்டை பகுதிகளில் உள்ள மக்கள் பா.ஜ.கவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என நினைக்கிறேன்” என்று கூறினார்.