![Airtel launched 5G service in 8 cities including Chennai!](http://image.nakkheeran.in/cdn/farfuture/9NNNpQbiKFE4xH_bVUSeBESHQa0NUe3yodgessjDbpg/1664680893/sites/default/files/inline-images/5g_0.jpg)
சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே 5ஜி சேவையைத் தரும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஏர்டெல் பெற்றுள்ளது.
நாட்டின் பிற பெரு நகரங்களில் அடுத்தாண்டு மார்ச் முதல் 5ஜி வழங்கப்படும் என்றும், 2024- ஆம் ஆண்டு மார்ச் முதல் நாடு முழுவதும் 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். தற்போது 4ஜி சேவைக்கு வழங்கப்படும் கட்டணமே, 5ஜி சேவைக்கு வசூலிக்கப்படும் என்றும், பின்னர் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வரும் அக்டோபர் 22- ஆம் தேதி முதல் அக்டோபர் 26- ஆம் தேதிக்குள் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் 5ஜி சேவையை வழங்கவுள்ளது. வோடஃபோன்- ஐடியா நிறுவனம், 5ஜி சேவை எப்போது முதல் வழங்கப்படும் என்று இன்னும் அறிவிக்கவில்லை.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை 200 நகரங்களில் இன்னும் ஆறு மாதங்களில் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.