இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் காசா பகுதி தன்னாட்சி பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. இந்த காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக் குழுக்களான ஹமாஸ் அமைப்பை, இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த அமைப்பு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் இன்று காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்குப் பதிலடி தரும் வகையில், ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகவும், 908 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 198 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 1600க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் போர் பதற்றம் காரணமாகப் பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லியிலிருந்து டெல் அவிவ் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.