போராட்டத்தில் ஈடுபட்ட 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் திடீரென விடுப்பு எடுத்து நேற்று போராட்டத்தைத் தொடங்கினர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்களின் இந்தத் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் உள்ள விமான சேவைகள் பெரிதும் பாதிப்படைந்தன. இத்தகைய சூழலில்தான் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள் இரண்டாவது நாளாக இன்றும் (09.05.2024) விடுப்பு எடுத்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களின் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் சென்னையில் இருந்து கொல்கத்தா, திருவனந்தபுரம் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு புறப்பட வேண்டிய 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்த ஊழியர்கள் 25 பேரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே சமயம் திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவதியடைந்த பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.