Skip to main content

'அந்த ஏழு பேரின் நோக்கமும் என்னை...'- உதற வைக்கும் ஜார்கண்ட் சம்பவம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
'The aim of those seven people was to sexually assault me'- Shocking Jharkhand incident

ஸ்பெயினை சேர்ந்த தம்பதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு பலவந்தமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வதும், சாகச சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வதும் அண்மையாவே அதிகரித்து வரும் நிலையில், பிரேசிலை சேர்ந்த ஸ்பானிஷ் பெண் ஒருவர் தன்னுடைய கணவருடன் மோட்டார் சைக்கிளிலேயே உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் 66 நாடுகளுக்கு இந்த தம்பதி பயணம் செய்துள்ளனர். தாங்கள் மேற்கொள்ளும் சுற்றுலா பயணங்கள் தொடர்பான விவரங்களையும், தங்களுடைய சாதனைகளையும் அவ்வப்போது அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி வந்தனர்.

இதுவரை இத்தாலி, ஈரான் என பல நாடுகளுக்கு சென்ற இந்த தம்பதி ஆப்கானிஸ்தான் சென்றதைத் தொடர்ந்து அடுத்த பயணமாக இந்தியாவை தேர்ந்தெடுத்தனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாகவே இந்தியாவிற்கு வந்த இவர்கள் தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகள், லடாக், காஷ்மீர், ஹிமாச்சல்பிரதேஷ் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சுற்றுலாத் தலங்களை பார்த்ததோடு, இந்தியாவில் தாங்கள் மேற்கொண்ட சாகச பயணம் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதி இருவரும் தனித்தனி பைக்கில் ஜார்க்கண்ட் வழியாக பாகல்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அன்று இரவு தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற ஒரு குக்கிராமத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து இருவரும் தங்கியுள்ளனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இளைஞர்கள் சிலர், இருவரையும் தாக்கியதோடு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து சமூக வலைத்தளங்களில் அந்த தம்பதி வீடியோ பதிவிட்டுள்ளனர். அந்த பகுதியில் ரோந்து பணிக்கு வந்த காவல்துறையினர், வெளிநாட்டவர் இருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதை கண்டு அதிர்ந்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தங்களுக்கு நேர்ந்த முழு துயரத்தையும் அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். அவர் சொன்ன அடையாளங்களை வைத்து விசாரித்த நிலையில் குற்றவாளி ஒருவன் சிக்கினான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

'The aim of those seven people was to sexually assault me'- Shocking Jharkhand incident

போலீசாரின் நடவடிக்கைக்கு பிறகு அந்த ஸ்பெயின் தம்பதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், 'எங்களுக்கு நடந்ததுபோல் யாருக்கும் நடக்க கூடாது. ஏழு பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். எங்களை அடித்து துன்புறுத்தியதோடு எங்களிடமிருந்த உடைமைகளை கொள்ளையடித்தனர். அவர்களின் நோக்கம் எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதாகவே இருந்தது. இந்த சம்பவம் எங்களுக்கு இந்தியாவில் நடந்தது' என உலக மக்களுக்கு பேரறிவிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றம், இந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்