
இந்தியாவில் கரோனா கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், அதன் தாக்கம் தற்போது குறைந்துவருகிறது. இதற்கிடையே அண்மையில் கோயம்புத்தூரில் கரோனாவிலிருந்து மக்களைக் காக்க வேண்டி, கரோனா தேவிக்கு சிலை எழுப்பப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. கேரளாவிலும் ஒருவர் கரோனா தேவிக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்திவருகிறார்.
இந்தநிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தின் சுக்லாப்பூர் கிராம மக்கள், ஒரு வேப்ப மரத்தின் கீழ் கரோனா மாதாவிற்கு கோவில் கட்டியுள்ளனர். உள்ளூர் மக்களிடம் பணம் வசூலித்து இந்தக் கோவில் எழுப்பப்பட்டுள்ளது. இதில் உள்ள கரோனா மாதா சிலையும் முகக்கவசம் அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா மாதாவிற்கு கோவில் கட்டப்பட்டது குறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், "கரோனா வைரஸ் தொற்றுநோயையும், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த அதன் கொடிய தாக்கத்தையும் கண்டபின், தெய்வத்தை வணங்குவது நிச்சயமாக மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்ற முழு நம்பிக்கையுடன், வேப்ப மரத்தின் கீழ் கரோனா மாதாவிற்கு கோவில் எழுப்ப முடிவு செய்தோம்" என கூறியுள்ளனர்.