டெல்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இரண்டாவது முறையாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து டெல்லி அமைச்சரவையின் நீர்வளத்துறை உள்ளிட்ட 14 துறைகளை கவனித்து வந்த அதிஷியை டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிஷி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுச்சாவியை முறைப்படி ஒப்படைக்கவில்லை என்றும், அதிஷியும் முறைப்படி ஒப்புதல் பெற்று குடியேறவில்லை என்றும் கூறப்பட்டது. இதனிடையே, முதல்வரின் இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகவும், முதல்வர் அதிஷியை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தது. இது குறித்து, டெல்லி முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ‘பொதுப்பணித் துறை அதிகாரிகள் குழு, டெல்லி முதல்வரின் இல்லத்துக்கு வந்து, முதல்வர் அதிஷியின் அனைத்து உடமைகளையும் முதல்வர் இல்லத்தில் இருந்து அகற்றியுள்ளது. பா.ஜ.கவின் உத்தரவின் பேரில் வலுக்கட்டாயமாக காலி செய்யப்பட்டது. அந்த இல்லத்தை,பா.ஜ.க தலைவர் ஒருவருக்கு ஒதுக்க துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா விரும்புகிறார்’ எனத் தெரிவித்திருந்தது. முதல்வர் இல்லத்தில் இருந்து முதல்வர் அதிஷியின் உடைமைகள் வெளியேற்றப்பட்ட விவகாரம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், முதல்வர் அதிஷி தன்னுடைய பழைய இல்லத்தில் அமர்ந்து பணியாற்றும் படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படத்தில், வீட்டுச்சாமான்கள் அடங்கிய அட்டைப்பெட்டிகளின் நடுவே அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது போல் இடம்பெற்றுள்ளன. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை, ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளதாவது, ‘இதை பாருங்கள் பா.ஜ.க.காரர்களே! டெல்லி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு கொடுத்த வீட்டை நீங்கள் பறித்தீர்கள். ஆனால், டெல்லி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எப்படி அகற்றுவீர்கள்? நவராத்திரியின் போது ஒரு பெண் முதலமைச்சரின் வீட்டிலிருந்து தூக்கி எறியப்பட்ட வீட்டுப் பொருட்களையும் நீங்கள் பார்க்க வேண்டும். மேலும், டெல்லி மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பையும் பார்க்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.