தொழில்நுட்ப கோளாறால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகளை மீண்டும் அழைத்துச் செல்வதற்கு 5,000 ரூபாய் பணம் கேட்டதாக, நடிகையும், சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகையும், ஆந்திர சட்டப்பேரவையின் உறுப்பினருமான ரோஜா, இன்று (14/12/2021) காலை 09.20 மணியளவில் ராஜமுந்திரி விமான நிலையத்தில் இருந்து திருப்பதிக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்று கொண்டிருந்தார். இந்த விமானத்தில் 70 பயணிகள் இருந்தனர். நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதையடுத்து, விமானம் அவசரமாக பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில், விமானத்தில் இருந்த பயணிகளை வெளியே விடாமல் நான்கு மணி நேரம் கதவு அடைக்கப்பட்டிருந்ததாகவும், என்ன பிரச்சனை என்பதையும் பயணிகளிடம் விமானி தெரிவிக்கவில்லை என்றும் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார்.
மீண்டும் அழைத்து செல்வதற்கு விமான நிறுவனம் 5,000 ரூபாய் பணம் கேட்டதாகவும், இதனால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.