Skip to main content

ஹிஜாப்புக்கு பதில் துப்பட்டா அணியச் சொன்ன கல்லூரி; ஆசிரியர் எடுத்த அதிரடி முடிவு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
 Action taken by the teacher for College asked to wear dupatta instead of hijab

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் காவி துண்டை அணிந்துகொண்டு வந்தனர். இதனால், தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து ஹிஜாப் தடையைத் திரும்ப பெற, கடந்த ஆண்டில் ஆட்சிக்கு வந்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவு பிறப்பித்தார். கர்நாடகா சம்பவத்தைப் போல் மேற்கு வங்கத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் அரங்கேறியுள்ளது. 

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் இஸ்லாமிய வகுப்பைச் சேர்ந்த சஞ்சிதா காதர் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சஞ்சிதா காதர் ஹிஜாப் அணிந்து பணிக்கு வந்துள்ளார். இதனைக் கவனித்த கல்லூரி நிர்வாகம், அவரிடம் ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆசிரியை சஞ்சிதா காதர், தனது பணியை ராஜினாமா செய்து கல்லூரியை விட்டு வெளியேறினார்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து, ஹிஜாப் அணிவதற்குப் பதிலாகத் துப்பட்டாவால் தலையை மூடிக்கொள்ள அனுமதிப்பதாகக் கல்லூரி நிர்வாகம், சஞ்சிதாவிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தனது முடிவைக் கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு வாரத்தில் தெரிவிப்பதாக  சஞ்சிதா காதர் கூறியிருந்தார்.  

இந்த நிலையில், நேற்று (13-06-24) கல்லூரி நிர்வாகத்துக்கு சஞ்சிதா மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ‘உங்கள் உத்தரவைக் கவனமாக பரிசீலித்த பிறகு, உங்கள் நிறுவனத்தில் மீண்டும் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். புதிய வாய்ப்புகளை ஆராயவும் முடிவு செய்துள்ளேன். இந்த நேரத்தில் புதிய வாய்ப்புகளைத் தேடுவதற்கு இதுவே சிறந்த வழி என்று நான் நம்புகிறேன். மீண்டும் அதே கல்லூரியில் பணியாற்றுவதற்கு எனக்கு வசதியாக இருக்காது ’ என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதலியைச் சுட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்; விசாரணையில் திடுக் தகவல்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
A young man who incident his girlfriend in west bengal

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். இவரும் நிக்கு குமாரி துபே ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். மேலும், இவர்கள் இருவரும் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பட்ஜ் எனும் கெஸ்ட் கவுஸ்ஸில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4:30 மணியளவில் ராகேஷ், தனது காதலியான நிக்குவை ரிசப்ஷனில் வைத்து துப்பாக்கியைக் கொண்டு சுட்டார். இதில் நிக்குவின் தொடை பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். துப்பாக்கிச் சுடும் சத்தத்தைக் கேட்ட கெஸ்ட் கவுஸ் ஊழியர்கள் அலறியடித்து, படுகாயமடைந்த நிக்குவை பார்த்தனர். அப்போது, திடீரென்று, ராகேஷ் இருந்த அறையில் இருந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது.

உடனடியாக ஊழியர்கள், அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, ராகேஷ் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த நிக்குவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த ராகேஷின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராகேஷும், நிக்குவும் ஏழு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில், அந்த உறவை முறித்துக் கொள்ள நிக்கு விரும்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராகேஷ், நிக்குவை கொலை செய்ய முயற்சி செய்து தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் கட்டி வைத்துத் தாக்குதல்; நிலைகுலைந்த பெண் - பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 woman and a man were tied up and beaten in public in West Bengal

மேற்கு வங்கம் மாநிலத்தில் பொதுவெளியில் ஒரு பெண்ணையும், ஆணையும் கட்டி வைத்து தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கம் மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துவருவதால், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்தச் சம்பவம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் நடந்துள்ளது. வீடியோவில், ஒரு ஆணையும், பெண்னையும் மூங்கில் கம்பால் சரமாரியாக ஒருவர் தாக்குகிறார். அதனைப் பொதுமக்கள் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துகொண்டும், செல்போனில் படம் பிடித்துக்கொண்டு உள்ளனர். அடி தாங்க முடியாமல் பெண் நிலைகுலைந்து போயுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இருவர் மீதும் தாக்குதல் நடத்தியவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாஜேமுல் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலா செயலாளர் தெரிவித்துள்ளார். வீடியோவில் தாக்கப்படும் ஆணும், பெண்ணும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகவும், கட்டபஞ்சாயத்து அடிப்படையில் இருவருக்கும் பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த இஸ்லாம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாஜேமுல் சோப்ரா தொகுதி திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹமிதுர் ரஹ்மானுக்கு நொருக்கமானவர் என்று குற்றம் சாட்டிய பாஜக தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தொழில்நுட்ப தலைவர் அமித் மாளவியா, “மம்தா தலைமையிலான அரசில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. மேற்கு வங்கத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. மம்தா பெண்களின் சாபக்கேடு. தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.