/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/punecarni_1.jpg)
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்த வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது சிறுவன், கடந்த மே மாதம் 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன், தனியார் ஹோட்டலில் மது அருந்திவிட்டு தனது தந்தையின் சொகுசு வாகனத்தில் அதிவேகமாக வந்து முன்னே சென்ற பைக் மீது மோதினார். இந்த கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேந்தாந்த் அகர்வாலைப் பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேந்தாந்த் அகர்வாலைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேந்தாந்த் அகர்வாலைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பீட்சா, பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வேதாந்த் அகர்வால் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை விசாரித்த நீதிமன்றம், காரை ஓட்டி 2 உயிரை பறித்த சிறுவனுக்கு நீதிமன்றம், போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிபந்தனைகள் குறிப்பிட்டு சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கியது. விபத்தை ஏற்படுத்தி ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, சிறுவனுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிறுவனுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தில் சிறார் நீதி வாரியத்தைச் சேர்ந்த 2 உறுப்பினர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் நடத்திய அந்த விசாரணையில், மாநில அரசால் நியமிக்கப்பட்ட 2 சிறார் நீதி வாரிய உறுப்பினர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்களை நீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)