டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது. தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.