/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/acidn.jpg)
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று, உலகம் முழுவதும் ‘காதலர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தன்று, காதலர்கள் தங்களது காதலை பூக்கொடுத்தோ, அல்லது இனிப்புகளை வழங்கியோ பரிமாறிக் கொள்வார்கள். ஒருதலையாக காதலிக்கும் நபர்கள் கூட, இந்த தினத்தில் தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். உலகமே இந்த தினத்தை இன்று (14-02-25) மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் கொண்டாடி வரும் சூழலில், காதலை நிராகரித்ததால் இளம்பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், குர்ரம்கொண்டா மண்டலத்தின் பெரம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட இளம்பெண். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்து வருகிறார். இவரது கல்லூரியில் சக மாணவர் ஒருவர், காதலர் தினமான இன்று அந்த பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த நபரின் காதலை, இளம்பெண் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர், இளம்பெண் மீது ஆசிட் வீசியுள்ளார். இதில், அவர் பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றம்சாட்டபட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நாரா லோகேஷ், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல், இந்த சம்பவத்தை கண்டித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மாநில அரசை விமர்சித்துள்ளார். பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)