Skip to main content

இந்தியர்களை கைவிலங்கிட்டு அனுப்பியதாக குற்றச்சாட்டு; நாடாளுமன்றத்தில் கடும் அமளி!

Published on 06/02/2025 | Edited on 06/02/2025

 

Accused of sending Indians in handcuffs There is a lot of tension in the Parliament

அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராகப் பதவியேற்ற போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கையாள்வதில் கடுமையான கொள்கைகளை அறிவித்தார். சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது சொந்த நாட்டுக்குத் திரும்பி அனுப்பும் நிர்வாக உத்தரவிலும் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வெளிநாட்டினர்களை அடையாளம் காணப்பட்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்றன. 

இதனையடுத்து மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. அதன்படி, 104 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது. பல்வேறு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டனர். அதில் டெக்காசில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் 104 இந்தியர்கள் இருந்தனர். இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸ்  சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (05.02.2025) தரையிறங்கியது. முன்னதாக பயணம் முழுவதும் கால்களில் சங்கிலி மாட்டியும், கைகளில் விலங்குகள் இட்டும் விமானத்தில் இந்தியர்கள் பயணித்தனர் எனத் தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான படங்களும் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இந்த விவகாரத்தில், இந்தியர்கள் கண்ணியக்குறைவாக நடத்தப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றச்சாட்டியது. மேலும் கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்து இன்று (06.02.2025) விவாதம் நடத்தக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அதோடு வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

சார்ந்த செய்திகள்