இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன.
அதே சமயம், நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நேற்று(18.07.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “நீட் தேர்வு வினா - விடைகளை, மே 5ம் தேதி காலையிலேயே மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியென்றால் மே 5ம் தேதிக்கு முன்பே யாரோ ஒருவர் அனைத்து வினாக்களுக்கும் விடையை தயார் செய்திருக்கிறார்.
இது உண்மையாக இருந்தால், மே 4ம் தேதி இரவே வினாத்தாள் கசிந்துள்ளது. இதில் 2 சாத்தியக்கூறுகள் உண்டு. ஒன்று, வங்கி லாக்கருக்கு அனுப்பிவைக்கும் முன்பே வினாத்தாள் கசிந்திருக்க வேண்டும். அல்லது தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும்போது கசிந்திருக்க வேண்டும். எனவே மே 3 - 5 தேதிகளுக்குள் கசிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் சரியாக எப்போது கசிந்தது என்பதுதான் கேள்வி” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் அவர், “நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாக, மையங்கள் வாரியாக நாளை(20.7.2024) மாலைக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது வெளியிட்டுள்ளது. exam.nta.ac.in என்ற இணையதளத்தில் மையங்கள், நகரங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.