hjk

Advertisment

மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதில் கார் ஓட்ட கற்றுக்கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ரேஷாம் பாய். 90 வயதான அந்த மூதாட்டி, இன்றளவும் தன்னுடைய தேவைகளைத் தானே செய்துகொள்கிறார். பாட்டியின் வேகம், அவரின் வீட்டில் உள்ளவர்களே வேலை செய்ய முடியாத வகையில் மிக வேகமாக இருக்கும். சமைப்பது, துவைப்பது, வீட்டு வேலைகளை செய்வது என அனைத்து வகையான வேலைகளையும் அசராமல் இந்த வயதிலும் செய்துவருகிறார்.

ஒருமுறை அவர் பக்கத்து மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோயிலுக்குச் செல்லும் பொருட்டு குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அப்போது முன் சீட்டில் அமர்ந்திருந்த அவர், கார் டிரைவர் வண்டி ஓட்டுவதைக் கவனித்துள்ளார். அவரின் கார் ஓட்டும் முறையை உள்வாங்கிய அவருக்கு, தானும் கார் ஓட்ட வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தன் குடும்பத்தினரிடம் அவர் கூற, அதற்கு ஆரம்பத்தில் மறுத்தாலும் பிறகு ஓகே கூறியுள்ளனர். இதனையடுத்து பயிற்சிக்குச்சென்ற அவர், தற்போது நல்ல முறையில் கார் ஓட்டிவருகிறார். இவர் கார் ஓட்டும் வீடியோவை பகிர்ந்துள்ள அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், அந்த மூதாட்டிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.