துருக்கியைத் தொடர்ந்து இந்தியாவில் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்படலாம் என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கியில் திங்கள் அன்று அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியாவில் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இஸ்ரேல் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கமானது உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மூன்றாவது நாளாக இன்று தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்நாளில் பலி எண்ணிக்கை 2,600 ஐ கடந்த நிலையில் தற்போது 8000- ஐ கடந்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. நிலநடுக்கத்தை தொடந்து அதிர்வுகள் 200 முறை அதிர்வுகள் உணரப்பட்டதாலும் கடும் குளிர் போன்றவற்றால் மீட்புப்பணிகள் பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் பல்வேறு நாடுகளில் உள்ள மீட்புக்குழுவினர் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட நில அதிர்வுகளில் வேறு எந்த நாடுகளின் பகுதிகள் பாதிக்கப்படலாம் என்ற ஆராய்ச்சிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இந்தியாவில் குஜராத், நாகாலாந்து, அஸ்ஸாம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மற்றும் பீகார் என 8 மாநிலங்களில் உள்ள பகுதிகள் நில அதிர்வு மண்டலத்தின் கீழ் வருவதாகவும் அப்பகுதிகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த ஆய்வுகள் கூறியுள்ளது.
துருக்கி நிலநடுக்கத்தை முன்பே கணித்த ப்ரான்க் ஹூகர்பீட்ஸ் தற்போது இந்தியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விஷயத்தினை பகிர்ந்துள்ளார். அதில், பெரும் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக இந்தியப் பெருங்கடலில் முடிவடையும் எனத் தெரிவித்துள்ளார்.