இந்திய ராணுவ வரலாற்றில் முதன்முறையாக பீரங்கி படையில் 5 பெண் அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராணுவத்தின் போர் படைப்பிரிவுகளில் பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த ஜனவரியில் அறிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது.
இந்நிலையில் சென்னை பரங்கிமலையில் ஓ.டி.ஓ எனப்படும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சியை முடித்த 5 பெண்கள் முதன்முறையாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். லெப்டினட் மேஹக் சைனி, சாக்ஷி துபே, அதிதி யாதவ், பயஸ் முத்கில், ஆகாங்ஷா ஆகிய 5 பேரும் சென்னையில் பயிற்சியை நிறைவு செய்த பின் பீரங்கிப்படையில் இணைந்தனர். 5 அதிகாரிகளில் 3 பேருக்கு சீன எல்லையை ஒட்டிய ராணுவத்தில் முன்கள பிரிவுகளிலும் மற்ற இருவருக்கும் பாகிஸ்தான் எல்லைகளிலும் பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெற்ற பெண் அதிகாரிகளுடன் 19 ஆண் அதிகாரிகளும் இப்படையில் இணைந்துள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ராணுவத்தில் வீராங்கனைகளை இணைக்கும் முக்கியத்துவமான நடைமுறை துவங்கியதில் இருந்து ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளிலும் பெண்களுக்கான பணியிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பீரங்கி படைப்பிரிவில் பெண் வீராங்கனைகள் அனுமதிக்கப்பட்டதும் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.