தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்தநிலையில் ராய்காட் மாவட்டத்தில், மலைப்பகுதியான தெலி கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 32 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதனைத்தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் மீட்புப்பணியில் இதுவரை 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதற்கிடையே சதாரா மாவட்டத்தின் படானில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 22 பேர் வரை மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.