ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று மாலை (02.08.2023) 51 வது சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாகக் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தின்போது இணையவழி விடுதிகள், விளையாட்டுகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்துக்களை தெரிவித்தார். இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு, தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்கு மற்றும் சேவை கவுன்சிலில் ஏற்றுக்கொள்ள உறுதியளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும். இந்த வரி விதிப்பு குறித்து 6 மாதங்களுக்குப் பின்னர் மறு ஆய்வு செய்யப்படும். தமிழ்நாடு, சிக்கிம், கோவா டெல்லி அரசுகளின் கோரிக்கைகள் இந்தக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தமிழக அரசின் தடைச் சட்டத்தை பாதிக்காத வகையில் 28% ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.