இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாத கடல் இணைப்பு பாலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த பெண் ஒருவர், காவல்துறையினரோடு வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் மும்பையில் பாந்தா- வொர்லி கடல் இணைப்பு பாலம் ஒன்று இருக்கிறது. இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், 26 வயது பெண் ஒருவர் இந்த பாலத்தில் இருசக்கர வாகனம் மூலம் வந்துள்ளார். அப்போது, கடல் இணைப்பில் இருசக்கர வாகனத்தில் பயணித்து தெற்கு மும்பை நோக்கி ஒரு பெண் செல்வது குறித்து பாதுகாப்பு ஊழியர்கள் மும்பை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர், கடல் இணைப்பு பாலத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர்கள், அந்த பெண்ணிடம் இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளனர். அப்போது அந்த பெண், காவல்துறையினரோடு மிரட்டும் தொனியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அந்த வீடியோவில், “காவல்துறையினர் அந்த பெண்ணிடம் சாலையில் ஒரு ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி இறங்குமாறு அறிவுறுத்தியிருக்கின்றனர். அதற்கு அந்த பெண், ‘என்னை தடுக்க உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?. இந்த சாலை என் தந்தைக்கு சொந்தமானது. நான் வரி செலுத்துகிறேன். அதனால் இந்த சாலையில் விரும்பியதை நான் செய்வேன். என்னை விடவில்லையென்றால், என் பைக்கை வேகமாக ஓட்டிச் சென்று உங்கள் மேல் ஏத்திவிடுவேன்” என்று மிரட்டல் விடுத்து பேசுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், ஜபல்பூரைச் சேர்ந்த நுபுல் படேல் என்பது தெரியவந்தது. மேலும், அவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கட்டிட கலைஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் புனேவில் உள்ள தனது சகோதரரை பார்க்க கடந்த 15ஆம் தேதி புனேவிற்கு வந்திருந்தார். மேலும், அவர் மும்பையில் உள்ள பாந்தரா-வொர்லி கடல் இணைப்பை பார்ப்பதற்காக தனது சகோதரரின் இரு சக்கர வாகனத்தின் மூலம் புனேவில் இருந்து வந்து கொண்டிருந்த போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்தது.