22 person passed away in railway bridge collapse in Mizoram

Advertisment

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில், முதல்வர் ஜோரம்தங்கா தலைமையில் மிசோ முன்னணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கு தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து 21 கி.மீ தொலைவில் உள்ள சாய்ராங் பகுதியில், பைராபி- சாய்ராங் ரயில் நிலையங்களுக்கு இடையே, குருங் ஆற்றின் குறுக்கே புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. வடகிழக்கு பிராந்தியத்தில் மாநிலத் தலைநகரங்களை ரயில் பாதை மூலம் இணைக்கும் திட்டத்தின் கீழ் இந்தப் பாலம் கட்டப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தன. இங்கு சுமார் 40 தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2 உயரமான தூண்களுக்கு இடையே அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட இரும்பு கர்டர் பொறுத்த முயன்றபோது, கர்டர்களில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இந்த விபத்தில் சிக்கினர். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக மீட்பு குழுவினருக்குத்தகவல் கொடுத்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சென்ற மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 22 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், படுகாயமடைந்த 9 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

Advertisment

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர், “மிசோரம் மாநிலத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இந்த விபத்தில் இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.