Skip to main content

21 பேருக்கு டெல்டா ப்ளஸ் கரோனா பாதிப்பு - மஹாராஷ்ட்ரா அறிவிப்பு!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

DELTA PLUS

 

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை மெல்ல குறைந்துவருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெரும் அளவில் தளர்வுகளை அளிக்கத் தொடங்கிவிட்டன. அதேநேரத்தில் நாட்டில் கரோனா இரண்டாவது அலைக்கு காரணமாக இருந்த டெல்டா வகை கரோனா, டெல்டா ப்ளஸ் ஆக மரபணு மாற்றமடைந்துள்ளது.

 

இந்த டெல்டா ப்ளஸ் வகை கரோனா மூன்றாவது அலையை ஏற்படுத்தலாம் என மஹாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனினும், டெல்டா ப்ளஸ் கரோனா கவலைக்குரிய தொற்றாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. அதேநேரத்தில் எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா, டெல்டா ப்ளஸ் வைரஸ் கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், நாட்டில் 15 - 20 பேருக்கு இதுவரை டெல்டா வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சுஜீத் சிங் நேற்று (21.06.2021) தெரிவித்தார். இந்தநிலையில், மஹாராஷ்ட்ராவில் மட்டும் 21 பேர் டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

 

மேலும், டெல்டா ப்ளஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பயண விவரங்களும், அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களா இல்லையா என்பதும் ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர், டெல்டா ப்ளஸ் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடமும் பரிசோதனை நடத்தப்படும் என கூறியுள்ளார்.

 

இதற்கிடையே, டெல்டா ப்ளஸ் வகை கரோனா கண்டறியப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாட்டு மண்டலம் ஏற்படுத்தும் பணிகளும், அப்பகுதிகளில் டெல்டா ப்ளஸ் கரோனா அதிகம் பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய மேலும் மாதிரிகள் எடுக்கும் பணிகளும் நடைபெற்றுவருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்