இந்தியாவில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளையும் சேர்த்து கடந்த 11 ஆண்டுகளில் 2.05 லட்சம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2008-09 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையான காலத்தில் மொத்தம் 53,334 மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றால் வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.2.05 லட்சம் கோடி எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கியில் மட்டும் 6,811 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் அந்த வங்கிக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.5,033 கோடி. பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 6,793 மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இதில் ரூ.23,734 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல ஹெச்டிஎப்சியில் ரூ.1,200 கோடி, பாங்க் ஆப் பரோடாவில் ரூ.12,962 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நீரவ் மோடி மோசடி செய்த பஞ்சாப் நேஷனல் ரூ.28,700 கோடியும், ஆக்ஸிஸ் வங்கியில் ரூ.5,301 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாங்க் ஆப் இந்தியாவில் ரூ.12,358 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.12,644 கோடியும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.493 கோடியும், லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.862 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது தவிர இந்தியாவில் செயல்படும் சில வெளிநாட்டு வங்கிகளிலும் மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கியில் ரூ.86 கோடியும், சிட்டி வங்கியில் ரூ.578 கோடியும், ஹெச்எஸ்பிசி வங்கியில் ரூ.312 கோடியும், ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்துவில் ரூ.12 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நடந்த இந்த மோசடிகளில் ஏற்பட்ட நஷ்டம் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.