புதிய நாடாளுமன்றத்தில் முதல் மசோதாவாக, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீட்டுச் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றி, இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த பிறகு, நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன் பிறகு, மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் அமலுக்கு வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கி நடைபெற்றது.
இந்த மசோதா மீதான விவாதத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேசினர். மேலும், இந்த மசோதா நிறைவேற்றுவதில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து பல கேள்விகளையும் எழுப்பின. அதற்கு பா.ஜ.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிலளித்து பேசினர். அதனைத் தொடர்ந்து மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 456 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை என்ற நிலையில், வாக்கெடுப்பு பெரும்பான்மையில் முடிந்ததால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதில் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லீம் கட்சித் தலைவரும் ஹைதராபாத நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வாக்களித்தார்.
அதே போல், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான இம்தியாஸ் ஜலீலும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார். இந்த மசோதாவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நிராகரித்தால், அவர்கள் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர்.