Skip to main content

"சட்டம் தன் கடமையை செய்யட்டும்" - உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர்

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

1983 indian world cup team press release for wrestlers issue

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலக்போப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் "தேசத்தின் மல்யுத்த சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்டதை கண்டு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறோம். கஷ்டப்பட்டு வாங்கிய பதக்கங்களை வீரர், வீராங்கனைகள் கங்கை நதியில் வீச நினைப்பது வருத்தமளிக்கிறது. பல ஆண்டு உழைப்பு, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதி உள்ளிட்டவற்றின் மூலம் கிடைத்த அந்த பதக்கங்கள் ஒட்டுமொத்த நாடே பெருமைப்படும் விஷயமாகும். எனவே, இந்த விவகாரத்தில் வீராங்கனைகள் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வீராங்கனைகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகிறோம். சட்டம் தன் கடமையை செய்யட்டும்" என தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

SA vs AFG : 56 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான் அணி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
SA vs AFG: Afghanistan bundled out by 56 runs

டி20 உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி தொடங்கியது. இதில் ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆப்கானிஸ்தான் அணி ஐந்து ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 23 ரன்களை மட்டுமே எடுத்தது.

இறுதியாகத் தென்னாப்பிரிக்காவின் அபார பந்து வீச்சால் 11 ஓவரின் 5வது பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 56 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணி சுருண்டது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி படைத்துள்ளது. 57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களம் இறங்க உள்ளது.

டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இன்று (27.06.2024) இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. 

Next Story

வாகனம் மோதி 2 பேர் பலி; மகனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரஜ்பூஷண் சிங்!

Published on 29/05/2024 | Edited on 29/05/2024
 Brajbhushan Singh again caught in controversy because of his son

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராகச் செயல்பட்டு வந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மற்றும் தேசியப் பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஆண்டு டெல்லி ஜந்தர்மந்தரில் தொடர் போராட்டம் நடத்தினர். அதன்பின்பு பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் (354 ஏ) பின்தொடர்தல் (354 டி), பாலியல் ரீதியாகப் பலவந்தப்படுத்துதல் (354) என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், உத்தரப் பிரதேச மாநிலம் கைசரகஞ்ச் தொகுதியில் மூன்று முறை பா.ஜ.க சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிஜ் பூஷண் சிங்கிற்கு, நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து, பிரிஜ் பூஷண் சிங்கின் மகனான கரண் பூஷண் சிங்கிற்கு பா.ஜ.க சார்பில் மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கரண் சிங் போட்டியிடும் கைசரகஞ்ச் தொகுதியில் கடந்த 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று கோண்டா பகுதியில் கரண் பூஷண் சிங்குக்கு பாதுகாப்புக்கு எஸ்யூவி கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்த வாகனம், இரண்டு சிறுவர்கள் பயணித்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில், 17 வயது சிறுவன் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60 வயது கொண்ட பெண்மனி ஒருவரும் இந்த விபத்தில் காயமடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்த இரண்டு பேரை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக, பா.ஜ.க வேட்பாளரான கரண் பூஷண் சிங், வாகனத்தில் இருந்தாரா? இல்லையா?  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, பாலியல் வழக்கில் சர்ச்சையில் சிக்கிய பிரஜ் பூஷண் சிங், தற்போது, அவரது மகனின் வாகனம், பைக் மீது மோதி இருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.