அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக பக்தர்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 15,000 காசோலைகள் செல்லாதது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, கோவில் கட்டுமானப் பணிகளைக் கவனித்துக்கொள்ள ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் நிதியளித்து வருகின்றனர். அதேபோல, கோயில் கட்டுமானத்திற்கு நிதி வசூலிப்பதற்கான பணிகளை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல இந்து அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.
இதில் கடந்த ஜனவரி 15 முதல் பிப்ரவரி 17 வரை, நாடு முழுவதும் ராமர் கோயில் கட்டுமானத்திற்காக நிதி வசூலிப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது விஸ்வ இந்து பரிஷத். அந்தவகையில், கோவில் கட்டுமானத்திற்கு இதுவரை 5,000 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ராமர் கோயிலுக்காக பக்தர்களிடமிருந்து பெறப்பட்ட 15,000 காசோலைகள் வங்கிகளால் செல்லாது எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதால் ராமர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் அதிர்சியடைந்துள்ளனர்.
விஸ்வ இந்து பரிஷத் சேகரித்த ரூ.22 கோடி மதிப்பிலான சுமார் 15,000 காசோலைகள் பல்வேறு காரணங்களால் செல்லாது என வங்கிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளில் பணம் இல்லாதது மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாகக் காசோலைகள் திரும்ப அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விரைவில் இதற்கான காரணம் கண்டறியப்படும் எனவும், தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய வங்கிகள் பணியாற்றி வருவதாகவும் கோயில் அறக்கட்டளை கூறியுள்ளது.