இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (29.11.2021) தொடங்கியது. இந்தநிலையில், கூட்டம் தொடங்கியது முதலே அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக இரண்டுமுறை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், அவை மீண்டும் கூடியதும் அமளி நீடித்தது. இதனால் மக்களவை நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள், தொடர்ந்து முழக்கத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூலோ தேவி நேதம், சாயா வர்மா, ஆர். போரா, ராஜாமணி படேல், சையத் நசீர் உசேன், அகிலேஷ், சிபிஎம்-மைச் சேர்ந்த எலமரம் கரீம், சிபிஐயைச் சேர்ந்த பினோய் விஸ்வம், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த டோலா சென், சாந்தா சேத்ரி, சிவசேனாவைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, அனில் தேசாய் ஆகிய மாநிலங்களவை எம்.பிக்கள் 12 பேர் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளில் வன்முறையாக நடந்துகொண்டது மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை உள்நோக்கத்தோடு தாக்கியதன் மூலமாக அவையின் மாண்பைக் குலைத்தது ஆகியவற்றுக்காக அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்களவை நாளை காலைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.