ஓநாய் தாக்கியதில் 10 பேர் இறந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேசம், மாநிலம் நக்குவா என்ற சிறிய கிராமத்தில் ஓநாய்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்களைக் குறி வைத்து ஓநாய்கள் தாக்கும் சம்பவங்கள் அங்கு அதிகரித்துள்ளது. இதுவரை 10 பேர் ஓநாய் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் உயிரிழந்த பத்து பேரில் எட்டு பேர் சிறுவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சுமார் 45க்கும் மேற்பட்ட நபர்கள் ஓநாய்களின் தாக்குதல்களால் காயமடைந்திருக்கின்றனர். தன்னுடைய இருப்பிடம் மற்றும் குட்டிகளை தாக்குபவர்களை குறிவைத்து தாக்கும் குணாதிசயங்கள் கொண்டது ஓநாய் என தெரிவித்துள்ள வனத்துறை, மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிராமத்தை ஒட்டிய பகுதிகளில் ட்ரோன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறை ஓநாய்களை கண்ட உடனே சுட்டுக் கொல்ல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு அங்கு ஓநாய் தாக்குதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1996 ஆம் ஆண்டு இதே உத்திரப்பிரதேசத்தில் 10 பேரை ஓநாய்கள் கடித்துக் கொன்றது குறிப்பிடத்தகுந்தது.