18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாக தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (நாளை) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தேர்தல் ஆணையர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினர். பின்னர் பேசத்தொடங்கிய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், 'நடைபெற்று முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் 64 கோடி பேர் வாக்களித்துள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளும் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். தேர்தல் தொடர்பாக முதன்முறையாக 100 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.
27 ஐரோப்பிய வாக்காளர்களை விட இரண்டரை மடங்கு அதிகமாக வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர். மக்களவைத் தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். 'தேர்தல் ஆணையத்தை காணவில்லை' என பகிரப்பட்ட மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம். நாங்கள் எங்கும் காணாமல் போகவில்லை. இங்கு தான் இருக்கிறோம். காஷ்மீரில் கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத வகையில் அதிகமாக வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் எந்த பெரிய கலவரமும் இன்றி வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2019இல் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்த நிலையில் 2024 தேர்தலில் 26 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடந்துள்ளது. சோம்பன் பழங்குடியின சமூகத்தினர் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்கு செலுத்தியுள்ளனர். கடுமையாக உழைத்த தேர்தல் பணியாளர்களுக்கு நன்றி' என்றார்.
தேர்தல் முடிந்த பிறகு தேர்தல் ஆணையர் செய்தியாளர்களைச் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.