தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 -க்கான வாக்குப்பதிவு, கடந்த 06.04.2021 அன்று காலை 07.00 மணியளவில் தொடங்கி, இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது, வேளச்சேரியில் (நந்தினி மருத்துவமனை அருகில்) 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் தூக்கிச் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அந்த ஸ்கூட்டி நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர் என்பது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, வேளச்சேரி தொகுதியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இயந்திரம் பழுதான விவிபேட் மற்றும் கூடுதல் (ADDITIONAL) வாக்குப்பதிவு இயந்திரங்கள் என்று தேர்தல் அதிகாரி பிரகாஷ் அறிக்கையில் விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில், 15 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். இதனால், மறுதேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வேளச்சேரி தொகுதிக்கான வாக்குச்சாவடி எண் 92-ல், ஏப்ரல் 17-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.