Skip to main content

ஜார்க்கண்ட் மாநில அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Vote of confidence on Jharkhand state government today

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, கடந்த ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ‘ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம்’ என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைடுத்து ஜார்கண்ட் மாநில அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி ஆட்சியமைக்க சம்பாய் சோரனுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை  தொடர்ந்து ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று (05.02.2024) சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் கூட உள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள சம்பாய் சோரன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற உள்ளது. மொத்தம் 81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த சூழலில் ஒரு சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது. 

Vote of confidence on Jharkhand state government today

தற்போது 80 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ள நிலையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு 29 உறுப்பினர்களும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 16  உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் தலா ஒரு உறுப்பினர்களும் என ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசுக்கு 47 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. எனவே சம்பாய் சோரனுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது. அதே சமயம் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 25 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் குதிரைப் பேரத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஐதராபாத்திற்கு அழைத்து செல்லப்பட்ட ஆளும் கூட்டணி எம்.எல்.ஏக்கள் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத்தில் இருந்து நேற்று (04.02.2024) ராஞ்சி திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்