Skip to main content

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்; பேருந்துகள் வழக்கம் போல் இயக்கம்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
Transport workers issue Buses are operating as usual

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகக் கடந்த டிசம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கி இருந்தனர். மேலும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.

பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. அதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நேற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவுகள் எட்டப்படாததால் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலைநிறுத்தம் நள்ளிரவில் இருந்து தொடங்கி உள்ளது. இருப்பினும் சென்னையில் வழக்கம்போல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், சென்னையில் உள்ள 32 பேருந்து பணிமனைகளில் இருந்து காலை 06.30 மணி வரை 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், “மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். இதே போன்று தமிழகத்தின் விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 
The website encountered an unexpected error. Please try again later.