Published on 15/07/2020 | Edited on 15/07/2020

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்டோரை மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை தொடருகிறது.
இந்த நிலையில் தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பாக மருத்துவர் வினிலா, கோவில்பட்டி சிறைக்கைதி ராஜா சிங், கோவில்பட்டி சிறைக் கண்காணிப்பாளர் சங்கர் ஆகிய மூன்று பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராக சி.பி.ஐ சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே கோவில்பட்டி அரசு மருத்துவர் வெங்கடேஷுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.