
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. தீர்ப்பை அமல்படுத்த 3 மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், '’தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையான காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலாண்மை வாரியம் அமைய தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் முரண்பாடுகள் உள்ளன. மத்திய அரசின் மனுவை நிராகரிக்கும் வகையில் வாதிடுமாறு வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதங்கள் வலுவாக எடுத்துரைக்கப்படும்.
விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.