தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
அந்த வகையில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவில் கடந்த 7 ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
அதே சமயம் பி.ஆர்.எஸ் கட்சித் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ், கடந்த 8 ஆம் தேதி நள்ளிரவு 2 மணியளவில் தனது வீட்டின் குளியலறைக்குச் சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். பின்பு வலியால் துடித்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இடது கால் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாகவும், அதற்காக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்நிலையில் சந்திரசேகர ராவின் உடல் நலம் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சென்று விசாரித்தார். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.