இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் இன்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது. மேலும், கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய திட்டங்களும் அறிவிக்கப்பட இருக்கிறது.
கடந்த 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், 2024 - 2025ஆம் நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு சற்று உயர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.