Skip to main content

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை; முதல்வர் அதிரடி உத்தரவு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Storm Advisory Meeting; Chief Minister's action order

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (01.12.2023) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கடந்த நவம்பர் 27 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சார வசதி உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

 

மழை, வெள்ளக் காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் வீழும் என்ற காரணத்தால், புயலின்போது விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

 

Storm Advisory Meeting; Chief Minister's action order

 

கன மழையின்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை காண்கிறோம். காவல்துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்தி, போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்திட வேண்டும். மழைக் காலத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள். இந்தத் துறைகள் எல்லாம் ஒருங்கிணைந்து அறிவுறுத்திட விரும்புகிறேன். கடந்த ஒரு சில நாட்களுக்கு முன், மழைநீர் அதிகம் தேங்கிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி செயல்பட வேண்டுமென்று அங்கு தேங்கும் மழை நீரை அகற்ற அதிக அளவில் மோட்டார் பம்புகளை பயன்படுத்தி உடனடியாக அகற்ற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

இக்கூட்டத்தில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் அபாஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

 


 

சார்ந்த செய்திகள்