அரசியலுக்கு வருவது குறித்து தனது நிலைப்பாட்டை விரைவில் தெரிவிப்பேன் என்று சமீபத்தில் மனம் திறந்த ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி ஆரம்பிக்கிறேன் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
ரஜினியின் இந்த அறிவிப்பு, தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரை தொடர்புகொண்டு வாழ்த்துகள் தெரிவிக்க அரசியல் வி.ஐ.பி.க்களின் கியூ நீண்டு கொண்டிருக்கிறது.
கட்சித் துவக்கவிருப்பதை அறிவித்த கையோடு, தனது ரசிகர் மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவை சேர்ந்த அர்ஜுன்மூர்த்தி என்பவரை நியமித்துள்ளார் ரஜினி. இந்த அறிவிப்பை தொடர்ந்து, யார் அந்த அர்ஜுன் மூர்த்தி எனப் பரபரத்துக் கிடக்கிறது ரஜினி மக்கள் மன்றம்.
அதேசமயத்தில், அவரது நியமனம் சில விமர்சனங்களையும் எதிரொலிக்கச் செய்து கொண்டிருக்கிறது.
இது குறித்து விசாரித்த போது, "மறைந்த முரசொலி மாறனின் சிஷ்யர்தான் இந்த அர்ஜுன் மூர்த்தி. கலைஞரின் மகள் செல்வியின் மருமகனான ஜோதிமணியின் நெருங்கிய நண்பர். மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனின் நெருங்கிய உறவினர். திமுக குடும்பத்தில் உறவுரீதியாகக் கோலோச்சியவர் இந்த அர்ஜுன் மூர்த்தி. மேலும், திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பிஸ்னெஸ் பார்ட்னராகவும் இருந்திருக்கிறார்" என்று அர்ஜுன் மூர்த்தியின் பின்னணியை விவரிக்கும் ரஜினி மக்கள் மன்றத்தினர், "தி.மு.க குடும்பத்தோடும், பா.ஜ.க கட்சியில் இருந்தவருமான அவரை, மக்கள் மன்றத்தின் தலைமைப் பொறுப்பாளராக நியமித்திருப்பது... பலரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ரஜினி எடுக்கும் முடிவுகள், ரகசியங்கள் எதிர் முகாம்களுக்குச் செல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?" எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கிடையே, இன்று மதியம் வரை பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராகவும் இருந்த அர்ஜுன் மூர்த்தியைக் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார் தமிழக பாஜகவின் பொதுச் செயலாளர் கரு.நாகராஜன். மேலும், நேரடி அரசியலுக்கு ரஜினி வரக்கூடாது என விரும்பிய தி.மு.க தலைமை, ரஜினியுடன் முக்கிய இடத்தில் அர்ஜூன் மூர்த்தி இருப்பதை மகிழ்ச்சியுடன் கவனிக்கத் துவங்கியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது!.