இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்த விவகாரத்தில் நரேந்திர மோடி வழக்கம்போல் மவுனம் சாதித்து வருகிறார்.
பீகார், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட கைதுகள் மூலம் தேர்வில் திட்டமிட்ட முறையில் ஊழல் நடந்திருப்பதையும், இந்த பாஜக ஆளும் மாநிலங்களில், தேர்வுத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளதையும் தெளிவாகக் காட்டுகிறது. நமது நீதித்துறையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம். எதிர்க்கட்சிகளின் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், இளைஞர்களின் குரலை வீதிகளில் இருந்து பாராளுமன்றம் வரை வலுவாக எழுப்பி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இதுபோன்ற கடுமையான கொள்கைகளை வகுக்க உறுதி அளித்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.