சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.
அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்க மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் மதுவிலக்கு திருத்தச்சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில் தற்போது மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.