
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அண்மையில் தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி புதிய மாவட்டச் செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் உள்ளிட்ட பலருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இதனிடையே அடுத்தாண்டு தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளில் மாற்றமில்லை என்று அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கும் வகையில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் தற்போதில் இருந்தே காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தை அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், இதுவரை 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும். விஜய் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என்று த.வெ.க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் த.வெ.க தலைவர் விஜய்யுடன் பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் திடீர் சந்திப்பு நடத்தி வருகிறார். நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்து வருவதாகவும், கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. த.வெ.க கட்சியின் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருந்து வரும் நிலையில் விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பை ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)