
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின்,
முதலமைச்சர் அழைப்பை ஏற்று இன்று அவரை தலைமைச்செயலகத்தில் நேரில் சந்தித்தோம். தமிழகத்தில் அனைத்துக் கட்சித்தலைவர்களையும், விவசாய சங்க பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு, பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என கடந்த வாரம் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றி ஒரு வார காலம் ஆகியும் பிரதமரிடத்திலிருந்து ஒரு பதிலும் வரவில்லை. இதற்கிடையில் முதலமைச்சர் எங்களை அழைத்து, பிரதமர் சந்திக்க மறுக்கிறார். நீங்கள் வேண்டுமானால் அந்த துறையின் அமைச்சர்களை சந்தியுங்கள் என்று எங்களுக்கு தகவல் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு நான் கேட்க விரும்புவது, முதலமைச்சர் எடப்பாடி சென்றால் தனியாக சந்திக்கிறார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் சென்றால் தனியாக சந்திக்கிறார். யார் யாரையோ தனியாக சந்திக்கும் பிரதமர், இது தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் இந்த சூழ்நிலையில் எங்களை எல்லாம் சந்திப்பதற்கு பிரதமர் மறுப்பது வேதனையளிக்கிறது. இது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அவமானம் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
உடனடியாக சட்டமன்றத்தை கூட்டுங்கள், பிரதமரை சந்திக்க தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றோம். அதற்கு முதல்வர், திங்கள் வரை பொறுத்திருந்து பார்ப்போம். பிரதமர் அலுவலகத்தில் இருந்து செய்தி வர வாய்ப்பு உள்ளது. திங்கள் வரை அந்த செய்திவரவில்லை என்றால், சட்டமன்றத்தை வருகிற 8ம் தேதியே கூட்டுகிறோம் என்று உறுதியளித்துள்ளார்.
பிரதமர் சந்திக்க மறுத்தால், திமுக, அதிமுக எம்.பி..க்கள் ராஜினாமா செய்வோம் என்று மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என கூறினோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சாத்தியக்கூறு இல்லை என தெரிவிக்கும் மத்திய அமைச்சர் நீதின் கட்கரியை சந்திக்க வலியுறுத்துகின்றனர். அவரை பார்ப்பதில் என்ன பயன்? காவிரி விவகாரத்தில் பிரதமர் எங்களை சந்திக்க மறுப்பது மாபெரும் அவமானம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.