இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (01-02-24) மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த வேண்டும் என எதிர்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி, “புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூடிய முதல் கூட்டத்திலேயே மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு மகத்தான சாதனை படைக்கப்பட்டது. குடியரசு தின நாள் அன்று நடைபெற்ற அணிவகுப்பில் பெண்களின் பெரும் பறைசாற்றப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். நாட்டின் பெண் சக்தியின் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம், இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தக் கூடாது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பதிவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நாளை இடைக்கால பட்ஜெட்டில் பல துறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். கடைசி கூட்டத் தொடர் என்பதால் இதனை யாரும் புறக்கணிக்க வேண்டாம். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்கு பிறகு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால், முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது.” என்று கூறினார்.