Skip to main content

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Parliamentary budget session begins today

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31-01-24) தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (01-02-24) மத்திய அரசின் 2024 -2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தொடரின் போது விலைவாசி உயர்வு, ராமர் கோயில் திறப்பு விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல், குளிர்கால கூட்டத் தொடரின்போது 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அமலாக்கத்துறையினர் மீதான புகார்கள் உள்ளிட்ட பிரச்சனைகளை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை அவை முழுக்க வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், நாடாளுமன்றத்தில் நடந்த இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.  அமளியில் ஈடுபட்ட 146 எம்.பி.க்கள் அந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்க நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்