தேனி மாவட்டம், போடி அருகே குரங்கனி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீ ஏற்பட்டு அதில் 39 பேர் சிக்கிய தகவல் அறிந்ததும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் காட்டுத் தீயில் மீட்கப்பட்டு போடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,
சென்னையில் இருந்து 27 பேர், ஈரோடு மாவட்டத்தில் 12 பேர் என 39 பேர் வந்துள்ளனர். இவர்கள் கடந்த சனிக்கிழமை மதியம் வந்துள்ளனர். கொலுக்கு மலையில் தங்கியுள்ளனர். குரங்கனில் இருந்து 15 கி.மீ. நடந்து சென்றனர். அங்கு தங்கிவிட்டு திரும்பி வந்தனர். அப்போது காட்டுத் தீயில் சிக்கியுள்ளனர். தகவல் கிடைத்து போலீசார், வனத்துறையினர், அப்பகுதி பொதுமக்கள் மூலம் 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மதுரை, தேனி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்து, இந்தப் பகுதியில் மூங்கில் காடுகள் உள்ளன. மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப் பிடித்துள்ளது. அந்த தீ பரவியுள்ளது. மற்றப்படி யாரும் தீ வைக்கவில்லை. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும். இறந்தவர்களின் சென்னையைச் சேர்ந்த நிவின் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது என்றார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்,
வனத்துறையினரின் அனுமதி இல்லாமல் இவர்கள் மலையேறியுள்ளனர். அனுமதி வாங்கியிருந்தால், முறைப்படி அனுமதி அளிக்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக வனத்துறையினரும் சென்றிருப்பார்கள். அனுமதியில்லாமல் சென்றதால் இதுபோன்ற விபரீதம் நடந்துள்ளது. இப்படியெல்லாம் மலைப்பகுதியில் நடைப்பயிற்சி செய்வார்கள் என்று இப்பத்தான் கேள்விப்படுகிறேன் என்றார்.
புதுக்கோட்டையில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த செய்தி அறிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1 மணிக்கு குரங்கனிக்கு வந்தார். மீட்கப்பட்டவர்களை உடனடியாக மதுரை, தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அரசு மருத்துவர்களிடம் நேரடியாக பேசி உரிய சிகிக்சை அளிக்குமாறு கூறினார். காலை 7 மணி வரை அங்கிருந்து அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனரா என்பதை உறுதி செய்த பின்னர் அவர் புறப்பட்டுச் சென்றார்.