பெருமழை வந்தாலும், புயல் வீசினாலும், வறட்சி ஏற்பட்டாலும், கொடிய நோய் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். அப்படிப் பஞ்சம் பிழைக்க கேரளாவில் உள்ள செங்கல் சூலைக்கு வேலைக்குச் சென்ற 10 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குழந்தைகளோடு உணவுக்குக் கூட வழியின்றி தவிக்கிறோம், எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்ப உதவுங்கள் எனக் கண்ணீரோடு கூறும் வீடியோ வைரலாகி பலரையும் கலங்க செய்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதிக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து செங்கல் அறுக்கும் கூலி வேலைக்கு ஏஜெண்டுகள் மூலம் அழைத்துச் சென்று விடப்படுவது வழக்கமாக இருக்கிறது. செங்கல் அறுக்கும் தொழிலாளர்களை அழைத்துச்சென்று விடும் ஏஜெண்டுகள் தாங்கள் வங்கிய பணத்தையும் தொழிலாளிகளின் தலையில் கட்டிவிடுவதால் கடனை அடைக்க முடியாமல் கொத்தடிமைகளாக வருடக்கணக்கில் வேலை பார்க்கும் அவலமான சூழல் தொடர்கதையாகவே தான் இருந்து வருகிறது.
அந்தவகையில் கடந்த நான்காம் தேதி காலை கேரளா மாநிலம் பாலக்காடு கிழக்காஞ்சேரி பக்கத்தில் இருந்து ஒரு வீடியோ ஒன்று சீர்காழி அருகே உள்ள எடமனல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மூலம் நமக்கு கிடைத்தது. அந்த வீடியோவில் பேசும் அந்த நபர்களில் சிலர் எடமணல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம்.
அதன் பிறகு அந்த வீடியோவை நான்காம் தேதி காலை பதினோரு மணிக்கு சீர்காழி எம்.எல்.ஏ. பாரதிக்கும், நாகை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பிவைத்தோம். சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி வீடியோவைப் பார்த்துவிட்டு, என்னால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவி செய்கிறேன் என ஆர்வத்துடன் கூறினார்.
அந்த வீடியோவில் உள்ள அனைவரும் மாற்று உடைகூட இல்லாத நிலமையில் கை கூப்பி வணங்கியபடி, "இங்கு ஆறு மாதத்திற்கு முன்பு செங்கல் அறுக்கும் வேலைக்கு வந்தோம். கரோனாவால் இரண்டு மாதங்களாக வேலை இல்லை. உணவுக்கு வழியில்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறோம். காட்டுப்பகுதியில் இருப்பதால் எந்த உதவியும் எங்களுக்குக் கிடைப்பதுமில்லை. செங்கல் அறுப்பதற்கு அழைத்து வந்து விட்ட ஏஜென்டுகளைத் தொடர்பு கொண்டு உதவி கேட்டால், எங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் செங்கல் உரிமையாளரும் எங்களை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஏற்கனவே நாங்க வாங்கிய கடன், எங்களை இங்கு கொண்டுவந்து விட்டவர்கள் வாங்கிய கடன் என இவற்றை அடைக்கவே கொத்தடிமைகளாக மாடா உழைக்கிறோம், இப்போ இரண்டு மாதமாக வேலையே இல்லாமல் மேலும் கடனை வாங்கி வயிற்றைக்கழுவும் நிலமையே ஏற்பட்டிருக்கு, இந்த வீடியோவைப் பார்க்குற யாராவது எங்க ஊர் எம்.எல்.ஏ.விற்கும் கலெக்டருக்கும் தகவல் கொடுத்து எப்படியாவது எங்களை ஊருக்கு அழைக்க ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறி கெஞ்சுகின்றனர்.
அவர்களை சீர்காழி எம்.எல்.ஏ.வும், மயிலாடுதுறை எம்.எல்.ஏ.வும், நாகை ஆட்சியரும் மீட்டுக் கொண்டுவருவார்கள் என்று பலரும் எதிர்ப்பார்க்கின்றனர்.