Skip to main content

ஏ.டி.எம்.களில் பணம் இல்லை! - அரசு என்ன செய்யப்போகிறது?

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்ததைவிட, நாட்டில் தற்போது பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரிசர்வ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு நேரெதிராக நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் பணம் கிடைக்கவில்லை என்ற செய்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

ATM

 

அசாம், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் பிரச்சனை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

 

 

வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு பணத்தை எடுத்திருந்தால் இந்த பற்றாக்குறை நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், பைசக்தி, பிஹூ மற்றும் இதர அறுவடைக்கால பண்டிகைகளின் காரணமாக, சில தினங்களுக்கு முன்னரே மக்கள் அதிகளவு பணம் எடுத்திருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என அரசு தரப்பு விளக்கியுள்ளது. 

 

இதுதொடர்பாக,ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் மத்திய நிதி அமைச்சகம் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தியிருக்கிறது. அதில், மிக அதிகளவிலான பணப்பதுக்கல் குற்றங்கள் நடப்பது, மக்களை பீதிக்குள்ளாக்கும் என்பதால் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநில அதிகாரிகள் மற்றும் வங்கி மேலதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் மத்திய நிதி அமைச்சகம் வழங்கியிருக்கிறது. 

 

 

அதேசமயம், ரூ.200 மதிப்பிலான ரொக்கம் வெளியிடப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இன்னமும் அதை வைக்க ஏதுவான ஏ.டி.எம். இயந்திரங்கள் அமைக்கப்படவில்லை என்பதும் இதற்கான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தங்களது அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட பணம் கிடைக்கவில்லை என பொதுமக்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். இந்த நிலை ஓரிரு தினங்களில் சரியாகிவிடும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 

சார்ந்த செய்திகள்