/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kuwait-fi-art.jpg)
குவைத் நாட்டில் மங்காஃப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று (12.06.2024) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 37 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதே சமயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து குவைத்தில் உள்ள இந்தியா தூதரகம் சார்பில் தெரிவிக்கையில், “இந்த தீ விபத்து தொடர்பாக, இந்திய தூதரகம் +965-65505246 என்ற அவசர உதவி எண்ணை அமைத்துள்ளது. இந்தியத் தொழிலாளர்கள் அனைவரையும் இந்த ஹெல்ப்லைனில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்க உறுதியுடன் உள்ளது. குவைத்துக்கான இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா, மங்காப் பகுதியில் தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். தேவையான நடவடிக்கை மற்றும் அவசர மருத்துவ சுகாதார பராமரிப்பு தொடர்புடைய குவைத் சட்ட அமலாக்கம், தீயணைப்பு சேவை மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jai-shankar-art_1.jpg)
இந்நிலையில் குவைத் தீ விபத்தில் இறந்தோருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் நகரில் தீ விபத்து ஏற்பட்ட செய்தி குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய தூதர் தூதர் முகாமுக்குச் சென்றுள்ளார். மேலும் இது குறித்த தகவலுக்காக காத்திருக்கிறோம். பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய விரும்புகிறேன். இது தொடர்பாக இந்திய தூதரகம் முழுமையான உதவிகளை வழங்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)