Skip to main content

அமைச்சகங்கள், துறைகளின் பெயர்களில் மாற்றம்!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

dmk

 

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை நாளை காலை பொறுப்பேற்கிறது. இந்த நிலையில் தமிழக அமைச்சர்களின் துறைகளின் பெயர்களை மாற்றியமைத்திருக்கிறார் ஸ்டாலின்.

 

தமிழகத்தில் உள்ள அமைச்சகங்கள், துறைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் இன்றுள்ள சூழலில் மிகுந்த மாற்றங்களை அடைந்துள்ளன. மக்களின் எதிர்பார்ப்பு, பணியாளர்களுடைய நலன், எதிர்கொள்ளும் சவால்கள், நிர்ணயிக்கப்படும் இலக்குகள், அரசின் இலட்சியங்கள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு சில அமைச்சகங்களின் பெயர்களையும், துறைகளின் பெயர்களையும் தொலைநோக்குப் பார்வையோடு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனப் பெயர் மாற்றத்திற்கான காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார். பெயர் மாற்றப்பட்ட துறைகளின் விபரம் வருமாறு :

 

1. தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும். இத்துறை தமிழகத்தில் தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் செயல்படும். மற்றத் துறைகளை ஒருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இது இருக்கும்.

 

2. வேளாண்மைத் துறை என்கிற அமைச்சகம் ‘வேளாண்மை - உழவர் நலத்துறை’ என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அரசின்  நோக்கம் சாகுபடியைப் பெருக்குவது மட்டும் அல்ல, நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்களுடைய நலன்களையும் பேணிக் காப்பது என்கிற தொலைநோக்குப் பார்வையையும், திட்டங்களையும் உள்ளடக்கியதாக இத்துறை செயல்படும்.

 

3. சுற்றுச்சூழல் துறை என்கிற அமைச்சகம் ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று பெயர்மாற்றம் செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கைகளையும், ஆயத்த நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இந்த அமைச்சகம் செயல்படுத்தும்.

 

dmk

 

4. மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது.

 

5. மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது.

 

6. தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது.

 

7. செய்தி - மக்கள் தொடர்புத் துறை ‘செய்தித் துறை’யாக உருமாற்றம் அடைகிறது. செய்தி என்பதிலேயே அத்துறையின் செயல்பாடான மக்கட்தொடர்பும் அடங்கியிருக்கிறது.

 

8. சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அதைக் குறிக்கும் பொருட்டும், அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை’ என்று வழங்கப்படவுள்ளது.

 

9. பணியாளர் என்கிற பதம் இன்று மேலாண் வட்டத்தில் அவர்களைப் பாரமாகக் கருதும் போக்கைச் சுட்டிக்காட்டுவதால் மனித வளமாகவே மதிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ‘மனித வள மேலாண்மைத் துறை’ என்று அழைக்கப்பட உள்ளது.

 

cnc

 

10. வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்கிற துறை 'வெளிநாடு வாழ் தமிழர் நலன்' என்று என்று பெயர் மாற்றம் அடைகிறது. உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களுடனான தாயகத் தமிழர்களின் உறவை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழ்க் குடும்பங்களிடமும் அவர்கள்தம் வருங்கால தலைமுறையினரிடமும் தமிழைக் கொண்டு சேர்த்து வளப்படுத்தும் நோக்கத்துடன் இப்பெயர் மாற்றம் நடைபெற உள்ளது. இனித் தமிழும் தமிழகமும் வெல்லும்.

 

உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் உயர்ந்த செயல்பாடுகளை மனத்தில் வைத்தும், தமிழக அரசு ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கின்ற சிறந்த நோக்கத்தின் அடிப்படையிலும் இந்தப் பெயர் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவை வெறும் பெயர் மாற்றமாக இல்லாமல் செயல்பாட்டிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் திட்டங்களாகக் கொண்டு செயல்படத் தூண்டுகோல்களாக இருக்கும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.