தமிழகத்தில் கரோனா தொற்று மின்சாரம் வேகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசும் சுகாதாரத்துறையும் திணறி வருகிறது.
இந்த நிலையில் பொதுமக்களோடு அரசியல்வாதிகள், அமைச்சா்கள் மற்றும் எம்.எல்.ஏ.-க்களையும் கரோனா தொடா்ந்து தாக்கி வருகிறது. இதில் குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன் கிள்ளியூா் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் தி.மு.க. நாகா்கோவில் மாநகரச் செயலாளா் வழக்கறிஞா் மகேஷ் மற்றும் கலை இலக்கியப் பிரிவு செயலாளா் தில்லை செல்வம் இருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு இருவரும் சிகிட்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில் இன்று 27-ஆம் தேதி தி.மு.க. நாகா்கோவில் எம்.எல்.ஏ.-வும் முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜனுக்கு உடல் சோர்வு ஏற்பட்டதையடுத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தில் இன்று வரை 3,849 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கரோனா பாதிப்பால் 32 போ் மரணமடைந்துள்ளனா்.